திருமங்கையாழ்வார்-07
திருமங்கையாழ்வாரின் சிறப்பான பாசுரங்கள்:
உயிர்களை கொடுமைபடுத்தாது, புறங்கூறாது நன்முறையில் வாழ்க்கை வாழவேண்டும் என்பதையே உலகின் அனைத்து மதங்களின் நெறியாய் உள்ளது. திருமங்கையாழ்வார் தான் இறையருள் பெரும் முன்னர் வழிப்பறி செய்தும், உயிர்களை துன்புறுத்தியும் இரவில் ஓர் வாழ்க்கையும், பகலிலே பக்திமானாகவும் இருவாழ்க்கை வாழ்ந்தார். இறைவன் தன்னை தடுத்தாட்கொண்ட பின், தனது பழைய வாழ்க்கையை எண்ணி வருந்தி கீழ்க்கண்டவாறு பாடுகிறார்,
"கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன்
கண்டவா திரிதந்தேனேலும்
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன்
சிக்கெனத் திருவருள் பெற்றேன்
உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்
உடம்பு எலாம் கண்ண நீர் சோர
நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன்
நாராயணா என்னும் நாமம்"
இவ்வரிகளை ஆய்ந்தால் இதற்குமுன் தான்புரிந்த கொலைகள் மற்றும் நெறிகெட்டவாழ்க்கையை எண்ணி மனம் வருந்தியது புலப்படும்.
மனிதன் நன்னெறிகளை கடைபிடிக்கவெனில், அவன் பிறப்பு, இறப்பு எனும் சக்கரத்தில் உழவேண்டும்,ஆனால் இவ்வாழ்வார் இந்த சக்கரத்தில் விழாது இறைவனிடம் பக்தி கொண்டமையை,
“சாதலும் பிறத்தலும் என்றிவற்றைக்
காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன்
ஓதல் செய் நான்மறை ஆகி, உம்பர்
ஆதல் செய் மூவுருவானவனே"
என்ற தம் பெரியதிருமொழியில் கூறுகிறார்.
வெற்றியும், தோல்வியும் மனிதவாழ்க்கையில் மாறிமாறிவரும், எனவே எந்நிலையிலும் சமநிலையில் இருக்கவேண்டும்,எனவே தம் மனதினை இறைவனிடத்தே ஒப்படைத்தால் அனைத்தும் அவன்செயல் எனும் தெளிவு உண்டாகும் என்பதனை,
"பரம நின் அடியினை பணிவன்,
வருமிடர் அகல -மாற்றோ வினையே"
இறைவனை தொழுபவர்க்கு தீவினை, நல்வினை எதுவும் சேராது என்கிறார்.
இவருடைய பெரியதிருமொழிக்கு தனியன் பாடிய ஆழ்வான்,
"நெஞ்சுக் கிருள்கடி தீப மடங்கா நெடும்பிறவி
நஞ்சுக்கு நல்ல வமுதம் தமிழநன் னூல்துறைகள்
அஞ்சுக் கிலக்கியம் ஆரண சாரம்,பரசமயப்
பஞ்சுக் கனலின் பொறிபர காலன் பனுவல்களே"
எனப்பாடும் பாடலை சற்று ஆராய்ந்தால், திருமொழியின் புகழ் மனிதனின் அறியாமையை போற்றும் அகல் போன்றது என்றும், பிறவாமையை தந்து இறைவனை அடையும் வழியென்றும், தமிழ் இலக்கியங்களில் எழுத்து, யாப்பு, சொல், பொருள், அணி, ஆகியவற்றை முறையாய் பெற்று விளங்கும் பேரிலக்கியம் என்கிறார்.
இவரது பாட்டமைப்புகளில் திருவேழுகூற்றிருக்கை என்பது மிகவும் கடினமான ஒன்று.இதனை திரு+ஏழு+கூற்று+ இருக்கை என பிரிப்பார்கள்,இவரின் கூற்றிருக்கை 46 அடிகள் கொண்டது, நிலைமண்டில ஆசிரியப்பா எனும் வகையை சேர்ந்தது.
ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து
மங்கையர் இருவரும்
மலரன அங்கையில் முப்பொழுதும்
வருட அறிதுயில் அமர்ந்தனை,
நெறிமுறை நால்வகை
வருணமும் ஆயினை
மேதகும் ஐம்பெரும்
பூதமும் நீயே அறுபதம்
முரலும் கூந்தல் காரணம், ஏழ்விடை
அடங்கச் செற்றனை அறுவகைச்
சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால்
ஓதியை ஆகத்து இருத்தினை அறமுதல்
நான்கவையாய்
மூர்த்தி மூன்றாய்
இருவகைப் பயனாய்
ஒன்றாய் விரிந்து
நின்றனை.
இவ்வாறு 1234567654321 என்று ஏற்ற இறக்கத்தில் அனாயாசமாகக் கவிதை புனைந்திருக்கிறார்.

No comments:
Post a Comment